Sunday, January 20, 2019

இன்மை
இன்மை சொல்பவர்களிடம் ஒரு கேள்வி
இன்மையின் இருப்புக்கு எது காரணம்??
இருப்பதற்கு எல்லாமே ஒரு காரணம்
இருப்பு ஒன்றே முதற்காரணம்

இல்லாமை உணர முதலில்
இருந்தமை அறிய வேண்டுமே!!
இல்லவே இல்லை என்று அறுதியிடல் கூட
இருக்குமோ என்ற அச்சத்தினாலன்றோ??

நிராகரிக்கப்படும் எதுவானாலும்
வடிவ பேதங்களுக்கு உட்பட்ட
ஏற்புகள் என்றும் உண்டு
அது
சாதியானாலும்
மதமானாலும்
மொழியானாலும்
சமத்துவமானாலும்
ஏன்??
கடவுளேயானாலும்!!!!!

வடிவ பேதங்களும் இன்மையாகும் போது
இருப்பதெல்லாம் ஒன்றேயாகும்
அது அன்பெனும் சிவமேயாகும்

….. கண்மணி

பார்த்தேன்

அந்தியும் இரவும் சந்தித்த வேளை
தென்றல் மென்மையாய் வருடிச்செல்ல
ரயிலடி மேடையில் ஒற்றையில் தனிமையில்
சுற்றி மனிதர்கள் பற்பல மொழியில்
பற்பல குரல்கள், வேக நடைகள்
வித வித உடைகள், பைகள் அழைப்புகள்
இரைச்சலினூடே ஆழ்ந்த அமைதியில்
நானும், ஒருத்தியாய்….

வானம் பார்த்தேன், மேகம் அற்றதாய்
நீல வண்ணத்தின் ஊடு நிறமாய்
இளம் சிவப்புக்கோடுகள்
மாலைக்கதிரவன் விடைபெற
பதிவேட்டில் கையொப்பம்
இரவின் வருகைக்கு இயற்கை ஆயத்தம்

அத்தனை சத்தமும் என்னைச்சுற்றி
பார்த்தல் மட்டுமே செய்யும் நான்.
எல்லாம் புரியும், எல்லாம் அறிவேன்
ஒன்றும் செய்யாது பார்த்தபடியாய்

இப்படி இருத்தல் வாழ்க்கையில் சுகம் தான்.
சாத்தியமோவென்று எண்ணியிருந்தேன்
சாத்தியமற்றது சாத்திரம் உரைக்குமோ
சொன்ன குருநாதன் சொற்பொருள் உணர்த்த

எப்படி இருந்தாய் இவ்விடம் மட்டும்
எல்லாம் பார்த்தும் எதுவும் பாராது
புரத்தில் பாராது அகத்தில் பார்த்து
பார்ப்பன பார்க்க கற்றுத்தந்த
சாத்திரம் சொன்ன குருகழல் சரணே

மனிதர்கள் யாவரும் மிகவும் விரும்புவது எல்லொருக்கும் துக்க நிவாரணம், சுகம் அடைய வேண்டும் என்பதே. இந்த கருத்தை நாம் மகாகவி பாரதியார் பாடல் ஒன்றில் நன்றாகக் காணலாம்.
கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராயணனாய், நதிச்சடை முடியனாய்,
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி,

அல்லா, யெஹோவா எனத் தொழுதின்புறும்
தேவருந்தானாய், திருமகள், பாரதி,
உமையெனுந் தேவிய ருகந்தவான் பொருளாய்,
உலகெங்குங் காக்கு மொருவனைப் போற்றுதல்
இந் நான்கே யிப் பூமி யிலெவர்க்கும்

கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா,
தனைத்தானாளுந் தன்மை நான் பெற்றிடில்,

எல்லாப் பயன்களுந் தாமே யெய்தும்;
அசையா நெஞ்ச மருள்வாய்; உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி, நின் னிருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா, வாழ்வேன் களித்தே.
ஒவ்வொரு மனிதனும் நான்கு புருஷார்த்தங்களை அடைவதற்காகத்தான் பெரும்பாலான காரியங்களைச் செய்கின்றான். அந்த புருஷார்த்தங்களை நமது சாஸ்த்திரஙள் அறம், பொருள், இன்பம், வீடு என்று கூறுகின்றன.
தன்னைக்கட்டுதல் என்பதே அறம். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மனிதன், தனது உடல், மனம், சுற்றம் இவற்றை எப்படி வைத்திருக்கிறானோ அதைப்பொருத்தே அவனது வாழ்க்கை நிம்மதியாய் இருக்கும். சரியான அளவில் உடலுக்கு உணவு, மிதமான, வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சி, அளவான தூக்கம், நிறைவான வேலை இவை ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது. இதை நமது குருநாதர் ஸ்நாமி பரமார்த்தானந்தர் Proper food, proper exercise, proper rest, proper occupation என்று கூறுவார்.
மனம் கட்டுப்பட நன்றாக த்யானம் பழக வேண்டும். புத்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தன்னைத்தான் காக்கின் சினம் காக்க என்றார் வள்ளுவர். உடல், மனம், பேச்சு இவை மூன்றும் கட்டுப்பாட்டில் இருத்தல் மிக அவசியம்.
பிறர் துயர் தீர்த்தல் என்பது, நம்மால் எவ்வளவு முடியுமோ தெரியாது ஆனால் நம்மால் நன்றாக பிரார்த்தனை செய்ய முடியும். பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று பாரதி கூறியிருக்கிறார். நாம் ஈட்டும் பொருள் எல்லாம் பிறருக்கு கொடுத்து உதவும் பொருட்டே.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
என்கிறார் வள்ளுவர். இங்கு வேளாண்மை என்றால் பரோபகாரம் என்பதே பொருள். பொதுவாக வேளாண்மை செய்வதே மற்றவர்களுக்காகத் தான்.
அடுத்க்து பிறர் நலம் வேண்டுதல் என்றால், அடுத்தவருக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களின் மீது ஒருவன் பொறாமைப் படக்கூடாது. நம்மிடம் உள்ள தீய குணங்களிலேயே மிகவும் தீய குணம் பொறாமை தான். நமக்கு கெடுதல் நினத்தவர்களாகவே இருந்தாலும், அவர்களுக்கும் நல்லதே நினக்க வேண்டும்.
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?
என்று கேட்கிறார் வள்ளுவர்.
மற்றவர்கள் நலமுடன் இருக்க வேண்டுவதே மிகப்பெரிய இன்பமாகும்.
இறைவனை எப்பொழுதும் சார்ந்து இருக்க வேண்டும் என்பதே ஒவ்வுரு மனிதனுக்கும் வீடு பேறளிக்கும் சாதனை ஆகும். இறைவன் ஒரு பெயரோ, மத்கமோ சார்ந்திராமல், அனைத்து விதமான தெய்வங்களின் பெயர்களையும் வஞ்சனை இல்லாமல் இறைவன் யாவர்க்கும் பொதுவானவன், வேறுபாடற்றவன் என்பதை உணர்த்தும் விதமாக, அவ்வளவு தெய்வங்களின் பெயர்களையும் பாரதி குறிப்பிடுகிறார்.

तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् |
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते || 10||
பகவத் கீதை, பத்தாவது அத்யாயத்தில், பகவான் யார் என்னையே தனது இதயத்தில் இருத்தி சதா பூஜை செய்து என்னையே போற்றி வருகிரார்களோ, அவர்களுக்கு உண்மையை உணரும் அறிவைத்தந்து இந்தப்பிறவிக்கடலைக்கடக்கச்செய்வேன் என்கிறார்.
ஆக, இறைவனச் சார்ந்து இருப்பவன் வீடுபேறு அடைவான் என்பது திண்ணம்.
இந்த பூமியில் இன்னான்கே எவர்க்கும் கடமை எனப்படும் என்பதன் மூலம் எளிமையாக மனிதப் பிறவியின் குறிக்கோளை அடையும் வழியை பாரதியார் நமக்கு அருளியுள்ளார்.
அனைவரும், தன் நலமும் பேணி, பிறர் நலம் காத்து, பிறர் நலம் வேண்டிப் பிரார்த்தனை செய்து, இறைவனை உள்ளத்தில் எப்பொதும் இருத்தி இருப்பதே நமது கடமையாகக் கொள்வோம்.
பூஜ்யஸ்ரீ ச்வாமி ஒங்காரானந்த மஹஸ்வாமிகள் அருளுரை கேட்டு எழுதியது.

சத்யம்
சத்தியம் குறித்தொரு தேடல்
முக்காலமும் மாறாதது முழுமையின் வடிவினது இருப்பெல்லாம் நிறைந்து இன்மை விலக்கியது உண்மை விளங்கியது

பொய் அல்ல உண்மையும் அல்ல
பொய் போல் தோன்றும் உண்மையும் உண்மை போல் தொன்றும் பொய்யும்
மலிந்திருக்கும் உலகினிலே
காணும் அனைத்தும்
காணாமல் போனாலும் காரணமாய் ஒன்றிருக்கும் அதுவே சத்யம் 

Saturday, January 19, 2019

ஆனந்தம்

எது கொண்டு அடைவேன் ஆனந்தம்? பொன்னும், பொருளும், மண்ணும் தருமோ? மனை தருமோ? பிள்ளை தான் தருமோ? எதுவும் தாராதே மானிடனே!!

மூக்கின் மேலிருக்கும் கண்ணாடி தேட மூவுலகும் சுற்றுவானேன்??

தூங்கும் பொழுது எது வைத்திருப்பாய்? எவ்விதம் படுக்கை என்பது கூட ஆழ்ந்த பின் அறியுமோ மனம்??
அருகில் யார் படுத்தாலும் அதனை அறியா மனமும் உறங்கி கிடக்கும் வேளையில்
உள்ளே உணர்ந்த உணர்வு ஒன்றே என்றும் அழியா அனந்தம்!!!

உறவு

உறவுகள் பலவகை.
சிலவற்றால் சுகம்
சிலவற்றால் துக்கம்
சில ஏற்றம் தரும்
சில இறக்கம் தரும்

பிறவிக்கடன் தீர்க்க
இறைவன் தந்த வரம் உறவு
வினைப்பயன்கள் ஒருசேர
பிறந்தோம் புவியதனில்
வினைதீர்க்க வினைபுரிந்து
கடப்போம் பிறவியெனும் கடலை

கைபிடித்து கரை சேர்க்கும்
காரியமாய் சில உறவும்,
கைவிட்டு கிணற்றில் தள்ளும்
கொடுமையாய் சில உறவும்




மனம்

மாசுகள் நிறைந்ததென்று உன்னை ஊர் பழிக்கும்
மனமே! கவலை கொள்ளாதே
மாசுகள் துடைத்தபின் உள்ளொளியாய்
சொல்லாத நுண்ணுணர்வாய்
சச்சிதானந்தமாய் அந்த சித்தாந்த முதலாய்
ஒளிரும் இறையறிய உனையல்லால்
வேறு துணை யார் எமக்கு??

ஆசைகள் நிறைந்ததென்று உன்னை ஊர் பழிக்கும்
மனமே! கவலை கொள்ளாதே
இறையறியும் ஆசை கூட
உன்னாலே தானே தெரிந்தது??

அசைவுகள் நிறைந்ததென்று உன்னை ஊர் பழிக்கும்
மனமே! கவலை கொள்ளாதே
அசைந்த பின் நீ கொள்ளும்
அசைவிலா நிலையே ஆனந்தம்
என்றறியார் யாரும்!!

மயக்கங்கள் நிறைந்ததென்று உன்னை ஊர் பழிக்கும்
மனமே! கவலை கொள்ளாதே
ஆசான் வந்து உன் மயக்கறுத்தால்
மாயை அழிந்து உன் சுயமறிவாயே

அறியாமை உறைவிடமாய், பின்
அறிவின் தெளிவிடமாய், இரண்டும் நீயானாய்
உன்னை என் சொல்லி வாழ்த்துவனே!!!